

வாஷிங்டன்,
உலகெங்கிலும் உள்ள வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) கேமை வரவேற்கும் விதமாக, அமெரிக்க விமானி ஒருவர் வானில் விமானப் பாதையின் மூலம் பிரம்மாண்டமான GTA 6 சுவரோவியத்தை வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் 'தி பைலட் பிக்காசோ' என பிரபலமாக அறியப்படும் பெஞ்சமின் மெக்டேனியல் என்ற விமானியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 5-ஆம் தேதி, அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பென்டன்வில்லி விமான நிலையத்திலிருந்து தனது 1978-ம் ஆண்டு மாடல் செஸ்னா 182 ஸ்கைலேன் ஆர்ஜி (Cessna 182 Skylane RG) ரக விமானத்தில் புறப்பட்ட அவர், தொடர்ந்து 8 மணி நேரம் 8 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' விளையாட்டை வரவேற்ற்கு விதமாக அற்புதமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
சுமார் 956 மைல்கள் தூரம் கொண்ட இந்தப் பயணத்தில், வானில் புகை வெளியிடுவதற்குப் பதிலாக ப்ளைட்ரடார் 24 (Flightradar 24) போன்ற விமானக் கண்காணிப்புத் தளங்களின் டிஜிட்டல் வரைபடத்தில் துல்லியமான ஓவியம் தெரியும்படி விமானத்தை இயக்கியுள்ளார். இந்த டிஜிட்டல் வான் ஓவியத்தில் GTA 6 லோகோ, ஹெலிகாப்டர், முதலை, பனை மரங்கள், ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் துப்பாக்கி ஏந்திய பெண் கதாபாத்திரம் ஆகியவை மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய பெஞ்சமின் மெக்டேனியல், "நவம்பர் 19-ம் தேதி வெளியாகவுள்ள GTA 6 கேமிற்காக 11 ஆண்டுகளாகக் காத்திருந்ததைக் கொண்டாடும் விதமாகவும், ஒரு தீவிர ரசிகராகவுமே இதனைச் செய்தேன்; இதில் எந்தவொரு விளம்பர நோக்கமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வான் ஓவியம் உருவான விதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பும் இவர் இதே முறையில் மோனாலிசா மற்றும் ஸ்பைடர் மேன் உருவங்களை வானில் வரைந்து உலக அளவில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.