

பாரிஸ்,
பிரான்ஸில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், இளம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்க உதவவும் அந்நாட்டு செனட் சபை முடிவை எடுத்துள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, வட்டியில்லா வீட்டுக் கடன் திட்டமான 'பி.டி.இசட்' திட்டத்தை விரிவுபடுத்தும் முக்கிய திருத்தம் செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இனி ஒவ்வொரு புதிய குழந்தை பிறக்கும்போதும் அந்த குடும்பங்கள் வட்டியில்லா வீட்டுக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தையை எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களுக்கும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கும் இந்த சலுகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் பிரான்ஸில் 6 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 2024-ம் ஆண்டை விட 2.1 சதவீதம் குறைவாகும். மேலும், 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்பு விகிதம் 24 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக, குடும்பங்களுக்கு வீடு வாங்குவதில் சலுகை அளித்தால் பிறப்பு விகிதம் உயரும் என செனட் சபை கருதுகிறது.
இருப்பினும், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் வட்டியில்லா கடன் வழங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மந்திரி டேவிட் அமியல், "இந்த திட்டத்தால் அதிக வருமானம் கொண்ட வசதியான குடும்பங்களும் அரசு சலுகையை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், வீட்டு விலையும் வாடகையும் அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் பழைய வீடுகளை வாங்குவதற்கும் வட்டியில்லா கடன் வழங்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக நகரங்களுக்கு செல்லும் இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 44 ஆயிரமாக இருந்த வட்டியில்லா வீட்டுக் கடன் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டில் 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தற்போதைய செனட் சபையின் இந்த முடிவுகள் இறுதி வடிவம் பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.