ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்


ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து:  டிரைவர் பலி; 37 பேர் காயம்
x

ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு, அதன் மீது, அரசால் நடத்தப்படும் ரெயில் மோதியதில் 41 பேர் பலியானார்கள்.

பார்சிலோனா,

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். பயணிகளில் 37 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால், சுவர் ஒன்று இடிந்து ரெயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த தகவல் அறிந்து, 20 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. தீயணைப்பு படை பிரிவின் 38 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு வளையம் அமைத்து, காயமடைந்த பயணிகளை மீட்டதுடன், ரெயிலையும் சீர்படுத்தினர். சுவரின் இடிந்த பகுதிகளையும் அகற்றினர்.

இந்த விபத்தில் காயமடைந்து இருந்த ரெயில் டிரைவரை மீட்டனர். எனினும், முதலுதவி சிகிச்சை அளித்தும் அவர் பலியாகி விட்டார். காயமடைந்த மற்ற பயணிகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கேட்டலோனியாவுக்கான உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நுரியா பார்லோன், பிராந்திய பகுதிகளுக்கான மந்திரி சில்வியா பனேக் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். ஸ்பெயின் நாட்டில் 2 நாட்களில் ஏற்பட்ட மற்றொரு ரெயில் விபத்து இதுவாகும்.

கடந்த ஞாயிற்று கிழமை, ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தின் மீது விழுந்தது. அப்போது, அதன் மீது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் 41 பேர் பலியானார்கள்.

விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1 More update

Next Story