ரஷியாவில் எண்ணெய் கசிவால் அவசர நிலை: அதிபர் புதின் நடவடிக்கை

ரஷியாவில் எண்ணெய் கசிவு காரணமாக அவசர நிலையை, அதிபர் புதின் பிரகடனம் செய்தார்.
ரஷியாவில் எண்ணெய் கசிவால் அவசர நிலை: அதிபர் புதின் நடவடிக்கை
Published on

மாஸ்கோ,

ரஷியாவில் சைபீரிய நகரமான நோரில்ஸ்க் அருகே உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு மின்நிலையம் இயங்கி வந்தது. இதன் பிரமாண்ட எரிபொருள் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமையன்று இடிந்து விழுந்ததில் ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அம்பர்னயா ஆற்றில் 20 ஆயிரம் டன் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு பின்னர்தான் இந்த சம்பவம் குறித்து ரஷிய அதிபர் புதின் கவனத்துக்கு சென்றது. இதில் அவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் உடனடியாக அவசர நிலையை அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமையன்று சமூக ஊடகங்களில் பரவிய பிறகுதான் இதுபற்றி தனது கவனத்துக்கு வந்ததாக பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் உஸ் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து அதிபர் புதின் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த மின் நிலையத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவம் குறித்து சரியான நேரத்தில் தெரிவித்து விட்டதாக நோரில்ஸ்க் நிக்கல் தெரிவித்தார். இந்த எண்ணெய் கசிவால் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அம்பர்னயா ஆறு சிவப்பு நிறமாக மாறி உள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் அங்கு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இந்த நடவடிக்கைகள் கடினமானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த விபத்து நவீன ரஷிய வரலாற்றில், அளவின் அடிப்படையில் பார்க்கிறபோது, இரண்டாவது பெரியது என நம்பப்படுவதாக உலக வனவிலங்கு நிதியத்தின் நிபுணர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com