

ஸ்டாக்ஹோம்,
தெற்கு ஸ்வீடன் கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான டேனிஷ் அரச போர்க்கப்பலிலிருந்து, மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட போர்க்கவசம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஸ்வீடனின் ரோன்னெபி கடற்கரைக்கு அருகே, பால்டிக் கடலில் உள்ள ஸ்டோரா எகோன் தீவுக்கு வடக்கே சுமார் 10 மீட்டர் ஆழத்தில் 'கிரிபின்' என்ற போர்க்கப்பலின் சிதைவுகள் அமைந்துள்ளன. கடந்த 1970-களில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கப்பலில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, கப்பலின் முன்பகுதி போர் மேடைக்குக் கீழே இருந்த ஆயுதப் பெட்டிக்கு அருகிலிருந்து இந்த போர்க்கவசம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கவசம் செப்புக் கலவையால் பின்னப்பட்ட சங்கிலிப் பின்னல் கவசமாகும். பால்டிக் கடலில் உப்புத்தன்மை மிகக் குறைவாக இருப்பதாலும், கடல் புழுக்களின் தாக்கம் இல்லாததாலும் 500 ஆண்டுகளைக் கடந்தும் இந்த கவசம் சிதையாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது. கப்பலின் ஆயுதக் கிடங்கு மற்றும் போர் வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புரிந்துகொள்ள இது மிக முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
கப்பலின் வரலாற்றுப் பின்னணி 15-ஆம் நூற்றாண்டில் டென்மார்க் மன்னர் ஹான்ஸுக்குச் சொந்தமான இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல், 1495-ஆம் ஆண்டு ஸ்வீடன் மன்னருடனான பேச்சுவார்த்தைக்காக சென்றபோது எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்து வெடித்து மூழ்கியது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஜெர்மன் கூலிப்படையினருக்கு இந்த கவசம் சொந்தமானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.