

இஸ்லமபாத்,
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள பனாமா கேட் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் வழக்குகளை பாகிஸ்தானில் உள்ள தேசிய பொறுப்புடமை கோர்ட் விசாரித்து வருகிறது. நவாஸ் ஷெரீப் மீது நடைபெற்று வரும் 3 ஊழல் வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான ஊழல் வழக்கை விசரித்த தேசிய பொறுப்புடமை கோர்ட், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், நவம்பர் 3 ஆம் தேதி நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தனது மனைவி கல்சூம் ஷெரீப்பை உடன் இருந்து கவனித்துக்கொள்ள, நவாஸ் ஷெரீப் தற்போது லண்டனில் உள்ளார். ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதில் இருந்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.