

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புளூ என்கிற இடத்தில் ஒரு செல்போன் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தின்மீது நேற்று முன்தினம் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் விறுவிறுவென ஏறி உச்சிக்கு சென்றார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்த நபரிடம் அவர்கள் பேசினர். அப்போது அவர், என்னை நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் ஆக்க வேண்டும் அல்லது பிரதமர் இம்ரான்கான் என்னிடம் வந்து பேச வேண்டும், அதற்கான ஏற்பாட்டை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.
அது போலீசாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரிடம் சமரசம் பேசினர். ஆனால் அவர் தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். கீழே இறங்கி வர மறுத்தார்.
அதைத் தொடர்ந்து ஷபாத் அலி என்ற மிமிக்ரி கலைஞரை போலீசார் அங்கு வரவழைத்து, அவரிடம் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்தவரிடம் பிரதமர் இம்ரான்கான் குரலில் பேச வைத்தனர். அவரும் இம்ரான்கானுடன் பேசுகிற நினைப்பில் 5 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார்.
அவரைப் போலீசார் கைது செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் முகமது அப்பாஸ் என்பது தெரிய வந்தது. அவர் மன நிலை சரியில்லாதவர் எனவும் தெரிகிறது. ஆனால் அவர், தன்னை பாகிஸ்தான் பிரதமர் ஆக்கினால் கடன்களை அடைத்து, நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்டெடுப்பேன் என்று கூறுவதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.