பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

பாகிஸ்தானின் ஜனாதிபதியாக 2-வது முறை ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

இஸ்லாமாபாத்,

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அக்கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே சமயம் ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான், பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் முகமது கான் அசாக்சாய்-ஐ அவரது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

68 வயதாகும் ஆசிப் அலி சர்தாரி, 2-வது முறையாக பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன் 2008 முதல் 2013 வரை ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com