பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து மாணவர்கள் உள்பட 35 பேர் பலி

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து மாணவர்கள் உள்பட 35 பேர் பலி
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து 34 மாணவர்கள் உள்பட 35 பேர் பலியாயினர்.

பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் உள்ள தார் காலனி பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பள்ளியில் நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பள்ளிக் கட்டிடத்தின் 3-வது தளத்தில் உள்ள வகுப்பறைகளில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.

மதிய வேளையில் திடீரென பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், இடிபாடுகளை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விபத்துக்கு காரணம்

எனினும், இந்த விபத்தில் 13 வயதுக்குட்பட்ட 34 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் உள்பட மொத்தம் 35 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான தெருக்களைக் கொண்ட தாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் சிறப்பு வழித்தடத்தை அமைத்து காயமடைந்தவர்களை மீட்டு விரைவாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், கட்டிட விதிமுறைகளை மீறி தரம் குறைந்த பொருட்களைக் கொண்டு இந்த மேற்கூரை கட்டப்பட்டதே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது.

உரிமையாளர் கைது

இதைத்தொடர்ந்து, கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இந்த பள்ளியை நடத்தி வந்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பள்ளி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மாகாண கவர்னர் பைசல் கரீம் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கூரை இடிந்து 30 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com