அமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு


அமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 29 Sept 2024 4:53 AM IST (Updated: 29 Sept 2024 12:33 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் பலியாகினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை பலவீனமடைந்தது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குவார். புளோரிடாவை சேர்ந்த 7 பேர், தெற்கு கரோலினாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் ஒருவரும் உயிரிழந்தனர். மொத்தத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 தீயணைப்பு வீரர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஹெலன் சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து ஒஹியோ மற்றும் இண்டியானா மாகாணத்திலும் மின்சார விநியோகம் தடைப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன. பாலங்கள் பரிசோதிக்கப்பட்டன.அமெரிக்கா மட்டுமின்றி மெக்சிகோவின் சில தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தும், மரங்கள் அடியோடு சாய்ந்தும் காணப்பட்டன. கியூபாவின் மேற்கே 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு வசதியின்றி துண்டிக்கப்பட்டு இருந்தன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story