அமெரிக்காவில் பனிப்பொழிவால் விபரீதம்: 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து - 8 பேர் பலி

அமெரிக்காவில் நிலவிய கடும் பனிப்பொழிவால் 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ஒன்றன்பின் ஒன்றாக மோதின

இதனால் சாலையில் முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி உருவானது. அப்போது அபாயகரமான வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த வழியாக சென்றது.

மூடுபனி காரணமாக எதிரே வந்த வாகனங்கள் தெரியாததால் முன்னால் வந்த கார் மீது அந்த லாரி மோதியது. இதில் அந்த டேங்கர் லாரியில் இருந்து வேதிப்பொருட்கள் கசிந்து மேலும் புகைமூட்டமாக மாறின. எனவே ஒன்றன்பின் ஒன்றாக 168 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

குப்பை குவியலான வாகனங்கள்

சங்கிலித்தொடர் விபத்தால் அந்த சாலை முழுவதும் வாகனங்கள் குப்பை குவியல் போல காணப்பட்டன. மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையே இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 63 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com