21 வாரங்களில் பிறந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை


21 வாரங்களில் பிறந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை
x

Image Courtesy : @GWR

குழந்தை பிறந்தபோது அதன் எடை சுமார் 283 கிராம் மட்டுமே இருந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லோவா மாகாணத்தை சேர்ந்த ரண்டால் கீன்-மோலி தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நாஷ் கீன் என பெயரிடப்பட்டது. சமீபத்தில் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடிய அந்த குழந்தை, பிறக்கும்போதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

குழந்தை நாஷ் தனது தாயின் கருவில் இருந்து வெறும் 21 வாரங்களில், அதாவது சுமார் 133 நாட்களுக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறந்தது. குழந்தை பிறந்தபோது அதன் எடை சுமார் 283 கிராம் மட்டுமே இருந்தது. இதன் மூலம் மிக குறைந்த காலத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையை அந்த குழந்தைக்கு தனதாக்கியுள்ளது.

குழந்தை நாஷ் சுமார் 6 மாதங்கள் அயோவா பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தையின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம்தான் குழந்தையை அதன் பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல மருத்துவர்கள் அனுமதித்தனர். சமீபத்தில் குழந்தை நாஷின் பிறந்தநாளை அதன் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதற்கு முன்பாக மிக குறைந்த காலத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற சாதனை கடந்த 2020-ம் ஆண்டு அலபாமாவில் பிறந்த குழந்தைக்கு சொந்தமாக இருந்தது. அந்த சாதனையை ஒரு நாள் வித்தியாசத்தில் குழந்தை நாஷ் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story