காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு 'முக்கியமானது' - இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசாவில் தீவிரமடைந்து வரும் போரால் அங்கு மனிதாபிமான நெருக்கடி மோசமாகி வருவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காசா,

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் 2 மாதங்கள் முடிவடைந்தது. இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காசாவின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளை போல முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதோடு போரின் விளைவால் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 7 நாட்களில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காசாவில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது. முன்பை விட முழுவேகத்துடனும், மூர்க்கத்தனமாகவும் காசாவை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இஸ்ரேலின் தற்போதைய போர் தெற்கு காசாவை சுற்றி நடந்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரம் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் நிலைகுலைந்து வருகிறது. இந்த சூழலில் காசாவில் தீவிரமடைந்து வரும் போரால் அங்கு மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமாகி வருவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

காசாவின் பெரிய நகரங்களைச் சுற்றி கடுமையான நகர்ப்புறப் போர் மூண்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதுகாப்பது "முக்கியமானது" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி தொடர்ப்பு கொண்டு கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com