ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; அமெரிக்கா ஆதரவு

பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்பதில் அமெரிக்கா தனது ஆதரவை மறு உறுதி செய்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; அமெரிக்கா ஆதரவு
Published on

இருதரப்பு கூட்டறிக்கை

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு இருதரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

* அமெரிக்க, இந்திய உறவை முன்னோக்கி கொண்டு செல்ல வழிநடத்தும் ஒரு தெளிவான பார்வையை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

* இந்தோபசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும், பகிரப்பட்ட நலன்களை ஊக்குவிக்க, ஆசியான் மற்றும் குவாட் நாடுகளுடன் இணைந்து ஒரு ராணுவ கூட்டாண்மையை உருவாக்கவும், இரு நாடுகளின் உழைக்கும் குடும்பங்களுக்கு வளத்தை அதிகரிக்கவும் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையை உருவாக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு

* கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தையும், பிற சுகாதார சவால்களையும் முடிவுக்கு கொண்டு வரவும், பருவ நிலை மாற்ற நடவடிக்கைகளை அதிகரிக்க உலகளாவிய முயற்சிகளை ஊக்குவிக்கவும், சம்பந்தப்பட்ட மக்களை ஆதரிக்கும் வகையில் ஜனநாயக மதிப்புகள் மற்றும் அமைப்புகளை வலுவாக்கவும், இரு தரப்பு மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்தவும் தலைவர்கள் உறுதி பூண்டனர்.

* கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில், தங்கள் நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் பெருமிதம் கொண்டதோடு, பாராட்டு தெரிவித்தனர். இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார்.

கோவிட்-19 உச்சிமாநாடு

* எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளுதல், உயிரி மருத்துவ ஆராய்ச்சி நடத்துதல், எதிர்கால பெருந்தொற்று நோய் அபாயத்தை குறைத்தல் உள்பட உலகளாவிய சுகாதாரத்தை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இறுதி செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் பாராட்டினர்.

* கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அடுத்த தொற்றை எதிர்கொள்வதற்கு சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தயார்ப்படுத்த உலகளாவிய கோவிட்-19 உச்சி மாநாட்டை நடத்த ஜோ பைடன் மேற்கொள்ளும் முயற்சியை மோடி வரவேற்றார். பருவநிலை மாற்ற விவகாரத்தில் அமெரிக்காவின் தலைமையையும் அவர் பாராட்டினார்.

* இந்தியா, அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதற்கு ஜோ பைடன் உறுதிஅளித்தார். இந்தியாவை பெரியதொரு ராணுவ கூட்டாளியாக்கவும் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதி செய்தார்.

* உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் கரம் கோர்த்து நிற்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்டுள்ள குழுக்கள் உள்பட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் இரு தலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். மும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதி கொண்டனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, ஆப்கானிஸ்தான் தலீபான்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்த தீர்மானம், ஆப்கானிஸ்தான் தனது பகுதியை ஒரு போதும் மீண்டும் எந்த நாட்டையும் அச்சுறுத்தவும், தாக்கவும் அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும் அல்லது பயிற்சி தரவும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடவும், நிதி அளிக்கவும் பயன்படுத்தக்கூடாது என இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

* மியான்மரில் வன்முறையைக் கைவிடவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், ஜனநாயகம் அங்கு மீண்டும் மலரவும் இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியா தலைமை ஏற்றிருந்ததை ஜோ பைடன் பாராட்டினார். சீர்திருத்தம் செய்யப்படுகிற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கான ஆதரவை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com