உளவு பலூன் சர்ச்சை: சீன பயணத்தை ரத்து செய்தார், அமெரிக்க வெளியுறவு மந்திரி

அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தையடுத்து, சீனா செல்ல இருந்த பயணத்தை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார்.
உளவு பலூன் சர்ச்சை: சீன பயணத்தை ரத்து செய்தார், அமெரிக்க வெளியுறவு மந்திரி
Published on

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனா செல்ல திட்டமிட்டிருந்தார்.

இருநாடுகளின் உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை என்பதால் ஆண்டனி பிளிங்கனின் சீன பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

உளவு பலூன் பறந்தது

இந்த பயணத்தின்போது ஆண்டனி பிளிங்கன் சீன வெளியுறவு மந்திரி உள்பட அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து, தைவான், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத உளவு பலூன் பறப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

பென்டகன் தகவல்

இதுப்பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி கூறுகையில், "மொன்டானாவில் உள்ள அணு ஆயுத தளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம்.

நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார். இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனா விளக்கம்

இதனிடையே மொன்டானாவில் காணப்பட்ட உளவு பலூன் போல் லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு உளவு பலூனை பார்த்ததாக பென்டகன் நேற்று தெரிவித்தது. எனினும் லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதிக்கு மேல் அந்த உளவு பலூன் உள்ளது என்பதை பென்டகன் தெளிவாக குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் சீனாவோ அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய விண் ஓடம் என்றும், தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வழிக்குள் வந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்தது. அதோடு இந்த விவகாரத்தை அமைதியாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் எனவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா ஏற்க மறுப்பு

ஆனால் சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்பதாக இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தையடுத்து, சீனா செல்ல இருந்த பயணத்தை வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார். மேலும் இந்த விவகாரத்தில் அவர் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது" என்றார்.

சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இந்த சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த இணையதள பத்திரிகை, சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது போன்ற வீடியோவை இணையத்தில் பகிர்ந்தது. மேலும், உளவு பலூனிலிருந்த உதிரி பொருள்கள் எந்தெந்த பகுதிகளில் விழுந்துள்ளன என்பது குறித்து அறிய நாசா விஞ்ஞானிகளின் உதவியை அமெரிக்க ராணுவம் நாடியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலூனை சுட்டு வீழ்த்துவதற்கு ஒப்புதல் அளித்தார் என்றும் இராணுவ அதிகாரிகளின் ஆதரவுடன் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com