ரஷியா-கிரீமியா இணைப்பு பாலத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் கைது

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக நபர்கள் 8 பேரை ரஷியா கைது செய்து உள்ளது.
ரஷியா-கிரீமியா இணைப்பு பாலத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் கைது
Published on

மாஸ்கோ,

ரஷியாவுடன் கிரீமிய தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கினார். 2018-ம் ஆண்டு புதினால் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் 2020-ம் ஆண்டு முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது.

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம், ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், உக்ரைனுடன் ரஷியா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து உள்ளது. 6 மாதங்களை கடந்த இந்த போரின் ஒரு பகுதியாக உக்ரைனின் டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஜ்ஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை ரஷியா தன்னுடன் சமீபத்தில் இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இது உக்ரைனை ஆத்திரமடைய செய்தது.

ரஷியாவின் தளவாட பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட உக்ரைன் அதன்படி, இந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது.

இதனை ரஷியாவின் பயங்கரவாத ஒழிப்பு குழுவும் உறுதி செய்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் வாகன பிரிவில் உள்ள சாலை பகுதியளவு சேதமடைந்தது. அதற்கு இணையாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீதும் தீப்பொறி பறந்து பற்றி கொண்டது.

இதில், ரெயிலின் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் தீப்பிடித்து கொண்டன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், குறைந்த அளவிலான போக்குவரத்துக்கு அன்றிரவு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான கியாஸ் குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்படி அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, கெர்ச் ஜலசந்தி பகுதியில் நடைபெறும் ரஷிய கூட்டமைப்பு மற்றும் கிரீமிய தீபகற்பத்திற்கு இடையேயான போக்குவரத்து, மின் கட்டமைப்புக்கான ஆற்றல் பாலம் மற்றும் கிராஸ்னோடார் பகுதிக்கும், கிரீமியாவுக்கும் இடையேயான முக்கிய கியாஸ் குழாய் இணைப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒருங்கமைத்து மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ரஷியாவின் மத்திய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவற்றின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 8 பேரை ரஷியா கைது செய்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என்றும் உக்ரைன் உளவு அமைப்பு நடத்திய தாக்குதல் இது என்றும் ரஷியா குற்றச்சாட்டு கூறியுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், உக்ரைனின் ஒடிசா துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்டில் வெளியே கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்பின்பு அவை பல்கேரியா, ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வழியே ரஷியாவை வந்தடைந்து உள்ளன என்றும் ரஷியா கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com