28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடந்தும் நீந்தியும் கடந்த பிரிட்டிஷ் சாகசக்காரர்!

அலாஸ்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பனி உறைந்து காணப்படும் ஆபத்தான 'பெரிங் நீரிணை' பகுதியை நடந்தும், பனிப்பாறைகளுக்கு இடையே நீந்தியும் கடந்தார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடந்தும் நீந்தியும் கடந்த பிரிட்டிஷ் சாகசக்காரர்!
கார்ல் புஷ்பி
Published on: 

லண்டன்,

மனித வரலாற்றின் மிக அசாத்தியமான உலகப் பயணங்களில் ஒன்றை வெற்றிகரமாக முடித்து, 57 வயதான பிரிட்டிஷ் சாகசக்காரர் ஒருவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான இங்கிலாந்தின் ஹல் நகருக்குத் திரும்பியுள்ளார்.

29 வயதில் தொடங்கிய சவால்

பிரிட்டிஷ் நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான கார்ல் புஷ்பி, கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, தனது 29 ஆவது வயதில் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் இருந்து 'கோலியாத் எக்ஸ்பெடிஷன்' என்ற பெயரில் இந்த உலகப் பயணத்தைத் தொடங்கினார்.

2 விதிகள்

இப்பயணத்திற்காக அவர் 2 கடுமையான சுயக் கட்டுப்பாட்டு விதிகளை விதித்துக் கொண்டார். அதாவது பயணத்தின் போது எக்காரணம் கொண்டும் எந்தவொரு மோட்டார் வாகனத்திலும் ஏறக் கூடாது. பயணத்தை முழுமையாக முடிக்காமல் சொந்த நாட்டிற்கு திரும்பக் கூடாது.

உயிரைப் பணயம் வைத்த பாதைகள்

தன் கால்களையே நம்பி பயணத்தைத் தொடர்ந்த கார்ல், தென் மற்றும் வட அமெரிக்கா முழுவதையும் நடந்தே கடந்தார். குறிப்பாக, அலாஸ்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பனி உறைந்து காணப்படும் ஆபத்தான 'பெரிங் நீரிணை' பகுதியை நடந்தும், பனிப்பாறைகளுக்கு இடையே நீந்தியும் கடந்தார். அதைத் தொடர்ந்து சைபீரியா, மங்கோலியா, சீனா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கடந்து பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தார்.

இறுதிக்கட்ட ’இங்கிலீஷ் சேனல்’ நீச்சல்

ஐரோப்பாவிலிருந்து தனது தாய்நாடான பிரிட்டனை அடைய, கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் கடற்கரையிலிருந்து 'இங்கிலீஷ் சேனல்' கடலைத் தொடர்ந்து 4 நாட்கள் நீந்திக் கடந்து இங்கிலாந்து மண்ணை அடைந்தார். அங்கிருந்து தனது சொந்த ஊரான ஹல் நகருக்கு நடந்தே சென்றடைந்தார்.

28 ஆண்டுகள் நீடித்தது ஏன்?

முதலில் இப்பயணம் 12 ஆண்டுகளில் முடிவடையும் என்றுதான் திட்டமிடப்பட்டது. ஆனால், ரஷ்யாவின் விசா சிக்கல்கள், 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எல்லை மூடல்கள் போன்ற காரணங்களால் இப்பயணம் 28 ஆண்டுகள் வரை நீடித்தது. அதாவது 29 நாடுகளைக் கடந்து, கிட்டத்தட்ட 50,000 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணம் மற்றும் நீச்சல் மூலமாக மட்டுமே அவர் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பேத்தியை முதன்முறையாக சந்தித்த நெகிழ்ச்சி

இதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) ஹல் நகரை வந்தடைந்த கார்ல் புஷ்பிக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாயகம் திரும்பிய கார்ல் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "இறுதியாக வீட்டிற்கு வந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. எனது 10 ஆண்டுகளாகப் பார்க்காத தாய், தற்போது 36 வயதாகும் எனது மகன் ஆடம் மற்றும் நான் இதுவரை நேரில் பார்த்திராத எனது 12 வயது பேத்தி ஆகியோரை நேரில் சந்தித்துள்ளது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம்" என்றார்.

மனிதனின் அசாத்தியமான விடாமுயற்சிக்கும் சகிப்புத்தன்மைக்கும் சான்றாக அமைந்துள்ள கார்ல் புஷ்பியின் இந்த சாதனைப் பயணம் உலக அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

X