

பீஜிங்,
சீனாவின் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திற்குள் கால்பதித்த முதல் வெளிநாட்டு வீரர் மற்றும் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை முகமது ஜீஷன் அலி பெற்றுள்ளார். 'ஷென்சோ-24' விண்கலம் மூலம் சக சீன வீரர்களுடன் நேற்று அவர் விண்வெளி நிலையத்தை அடைந்தார்.
பாகிஸ்தான் விமானப்படை அதிகாரியான இவருக்கு, விண்வெளியில் சீனா சார்பில் ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்கும் விதமாக ‘பட்டர் சிக்கன்', பீப் நிஹாரி, ஆட்டுக்கறி குருமா, கொண்டைக்கடலை கறி மற்றும் சீன கருப்பு தேநீர் ஆகியவை தனிப்பட்டமுறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதாவது, பாகிஸ்தான் வீரரின் உணவுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஹலால் தரநிலைகளின்படி இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மஞ்சள் மற்றும் கறி மசாலா போன்ற சுவைகளை உள்ளடக்கி, பலமுறை பரிசோதனை செய்த பின்னரே இந்த உணவுகள் இறுதி செய்யப்பட்டதாகச் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பப்படுத்துதல் மூலம் நுண்ணுயிரிகளை அழித்தும், உறைய வைத்து உலர்த்தும் தொழில்நுட்பத்தில் ஈரப்பதத்தை நீக்கியும் உணவுகள் கெடாமல் பேக்கிங் செய்யப்பட்டு விண்வெளியில் விருந்தளிக்கப்பட்டன.
ராஜ விருந்தின்போது ஜீஷன் அலி, அல்லாமா இக்பாலின் கவிதையை மேற்கோள் காட்டித் தனது சிறுவயது கனவு நனவானதாகவும், பாகிஸ்தானுக்குப் பெருமை சேர்த்ததாகவும் தெரிவித்தார். உயிர் அறிவியல் மற்றும் பொருள் அறிவியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும் அவர் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்புகிறார்.