நாடாளுமன்ற கட்டிட பாதுகாப்பு வேலி மீது கார் மோதல் - டிரைவர் கைது; பயங்கரவாத வழக்கின்கீழ் விசாரணை

லண்டன் நகரில் இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தின் பாதுகாப்பு வேலி மீது கார் மோதியது. காரை ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பயங்கரவாத வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற கட்டிட பாதுகாப்பு வேலி மீது கார் மோதல் - டிரைவர் கைது; பயங்கரவாத வழக்கின்கீழ் விசாரணை
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம், லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே உருக்கு கம்பிகளாலும், காங்கிரீட்டாலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று உள்ளூர் நேரப்படி காலை சுமார் 7.30 மணிக்கு ஒருவர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து அந்தப் பாதுகாப்பு வேலி மீது மோதினார். இதில் அந்தப் பகுதியில் நடந்து சென்றவர்கள், சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் என பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு ஆயுதப்படை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் குவிந்தனர். ஆம்புலன்சுகள் விரைந்து வந்தன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு முதல் உதவிக்கு பின்னர் ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த காரை ஓட்டிய நபர் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியின் மீது வேண்டுமென்றே மோதினார் என்று கூறினர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. மில்பாங்க், நாடாளுமன்ற சதுக்கம், விக்டோரியா டவர் கார்டன்ஸ் ஆகியவை சுற்றி வளைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியின்மீது அந்தக் கார் அதிவேகமாக வந்து மோதியதை நேரில் கண்ட ஜாசன் வில்லியம்ஸ் என்பவர் பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில், அந்தக் காரை மணிக்கு 40 மைல் வேகத்துக்கு அதிகமாக ஓட்டி வந்து அந்த நபர் மோதினார். அப்போது அந்தக் காரில் இருந்து புகை வந்தது. பலரை அந்தக் கார் இடித்து தள்ளியதால் பலரும் தரையில் விழுந்து ஓலமிட்டனர். குறைந்தது 10 பேர் அப்படி விழுந்து கிடந்ததைக் கண்டேன். என்னை அங்கிருந்து உடனே நகருமாறு போலீசார் அறிவுறுத்தினர். நானும் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கு இருந்து ஓட்டம் பிடித்தேன். இந்த சம்பவம் விபத்து அல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது என்று கூறினார்.

பி.பி.சி. செய்தியாளர் கேல்லம் மே சம்பவ இடத்தில் இருந்து கூறும்போது, நாடாளுமன்ற சதுக்கம் இப்போது போலீசாரால் சூழப்பட்டு உள்ளது. ஏராளமான எண்ணிக்கையில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்தப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். இந்த சம்பவம் பற்றி பிரதமர் அலுவலகமும், உள்துறை மந்திரி அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன. நாடாளுமன்ற பாதுகாப்பு வேலி மீது காரை மோதிய டிரைவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் பயங்கரவாத வழக்கின்கீழ் கைது செய்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற கட்டிட பாதுகாப்பு வேலி மீது கார் மோதியதால் ஏற்பட்ட பதற்றத்தால், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டுக்குள் பொதுமக்கள் நுழைய நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் இந்த சம்பவத்தால் லண்டன் நகரம் நேற்று அதிர்ச்சியில் உறைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com