அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு - மே17-ந் தேதி விசாரணை

அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ந் தேதி மேற்கொள்ள உள்ளது.
அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு - மே17-ந் தேதி விசாரணை
Published on

வாஷிங்டன்,

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, விமானப்படை வீரர்கள் பலர் வானிலை சில மர்மமான பறக்கும் தட்டு வடிவிலான விமானங்களை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அவை உளவு விமானங்களாக இருக்கலாம் என அப்போது நம்பப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து அமெரிக்காவில் சாமானிய மக்கள் பலர் இது போன்ற பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக சாட்சியம் அளித்தனர்.

இது தொடர்பான புகைப்பட சாட்சியங்களையும் பலர் போலீசாரிடம் சமர்ப்பித்தனர். அவற்றில் பெரும்பாலானவை வானில் பறக்கும் பலூன்களாகவும், பாராசூட்களாகவும் இருந்தன. இருப்பினும் சில ஆதாரங்கள் நிபுணர்களால் விளக்க முடியாத மர்மங்களாக நீடித்து வந்தன. அமெரிக்காவில் இது தொடர்பாக 1960-களில் வழக்கு விசாரணைகளும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக அமெரிக்காவில் மீண்டும் பறக்கும் தட்டு குறித்த சாட்சியங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க குறும்பட இயக்குனர் ஜெரெமி கார்பெல் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில், அமெரிக்க கப்பல் படையின் கப்பலுக்கு அருகே மர்மமான பொருட்கள் பறந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.

இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது. இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கார்சன் கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நடைபெறவுள்ளது. புலனாய்வுத்துறைக்கு கீழ் நடைபெறும் இந்த வழக்கில், பறக்கும் தட்டுக்களால் நமது தேசத்திற்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கு நடைபெறவுள்ளது. விளக்கம் அளிக்க முடியாத பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்கர்கள் மேலும் அறிந்துகொள்வதற்காக இந்த வழக்கு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த விசாரணையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர். இதை தொடர்ந்து வானில் தோன்றும் பொருட்களை கண்டறிதல் என்ற பெண்டகன் திட்டத்தின் கீழ் ரகசிய விசாரணை ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்த விசாரணையை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் மே 17-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com