முதல்முறையாக மனிதருக்கு பரவிய ஷாமோண்டா வைரஸ்-பிரான்ஸில் அதிர்ச்சி

வைரசை பரப்பும் ஈ போன்ற சிறிய பூச்சி அந்த நபரை கடித்ததன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
ஷாமோண்டா வைரஸ்
ஷாமோண்டா வைரஸ்
Published on: 

பிரான்ஸ்,

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா வைரஸ் முதல் முறையாக மனிதருக்கும் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் கடுமையான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு ஷமோண்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாடு, ஆடு, குதிரை போன்ற கால்நடைகளை மட்டுமே தாக்கும் ஷமோண்டா வைரஸ் மனிதருக்கும் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலிகாய்ட்ஸ் என்ற பூச்சி மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. விலங்குகளிடையே காணப்பட்ட இந்த வைரஸ் மனிதருக்கு எப்படி பரவியது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு

ஷமோண்டா வைரஸால் மாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், குதிரைகள் மற்றும் அல்பாக்கா போன்ற விலங்குகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சோர்வு மற்றும் பால் உற்பத்தி குறைவு ஆகியவை ஏற்படும். விலங்குகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஷமோண்டா வைரஸ் பிரான்ஸ் நபருக்குப் பரவியது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படி பரவியது?

பாதிக்கப்பட்ட நபருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்ததாகவும், கிழக்கு பிரான்ஸ் பகுதியில் கால்நடைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு பரவி வந்த நிலையில், வைரஸைப் பரப்பும் ஈ போன்ற சிறிய பூச்சி அந்த நபரைக் கடித்ததன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எனினும், விலங்குகளுக்கு மட்டும் பரவி வந்த இந்த வைரஸ் மனிதருக்கும் வந்திருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சுகாதார் அச்சுறுத்தல்

ஷமோண்டா வைரஸ் பரவிய விவகாரத்தைக் கண்காணித்து வருவதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஷமோண்டா வைரஸால் பொதுமக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com