

பெஷாவர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான், அரசியல் களத்தில் குதித்தார். கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை தொடங்கினார். படிப்படியாக கட்சியை வளர்த்து, 22 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். தற்போது பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை திடீரென நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வந்த ஆசாத் உமரை இம்ரான்கான் நீக்கினார். புதிய நிதி மந்திரியாக அப்துல் ஹபீஸ் ஷேக்கை நியமித்தார். மந்திரிசபையில் மேலும் சில மாற்றங்களை செய்து உள்நாட்டு அரசியலை இம்ரான்கான் பரபரப்புக்கு உள்ளாக்கினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பழங்குடியினர் பெருந்திரளாக வாழ்கிற ஓரக்ஜாய் மாவட்டத்தில் கலயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனது ஒரே நோக்கம், நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான். அதற்காகத்தான் எனது அணியில் பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்தேன். இது இயல்பானது. எதிர்காலத்திலும் இதை நான் செய்வேன். நான் எல்லா மந்திரிகளுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நாட்டுக்கு பயன்படாத மந்திரிகள் நீக்கப்படுவார்கள். அவர்கள் இடத்துக்கு நாட்டுக்கு பலன் அளிக்கத்தக்கவர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு நல்ல கேப்டன், தொடர்ந்து தனது அணியின் மீது கண்களை வைத்திருக்க வேண்டும். அணி வெற்றி பெறுவதற்கு சில நேரங்களில் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும். ஒரு வீரரை நீக்கி விட்டு புதிய வீரரை நியமிக்கலாம்.
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களின் முதல்-மந்திரிகளும் தங்களது அணிகளை தீவிரமாக கண்காணித்து வரவேண்டும். ஏழைகள் படுகிற கஷ்டங்களுக்காக, அவர்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தராவிட்டால், மருந்து விலைகள் திடீரென ஏற்றம் கண்டால் இறைவனுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பே நான் பழங்குடி மக்கள் படுகிற கஷ்டங்களைப்பற்றி பேசி உள்ளேன். அப்பாவி மக்கள் சாகிறார்கள். பழங்குடியினர் இடம் பெயர்கின்றனர்.
பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களை முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.