

கராச்சி,
பாகிஸ்தானில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கராச்சி நகரில் நேற்று முன்தினம், கப்பல் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருந்து வந்த சென் சூ (வயது 45) என்பவர் தனது காரில் மார்க்கெட் பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர் தப்பினார்.
இதில் சென் சூ, ரத்த வெள்ளத்தில் பலி ஆனார். அவர் குறிவைத்து சுடப்பட்டு உள்ளதாக கராச்சி போலீஸ் டி.ஐ.ஜி., ஆசாத் கான் கூறினார்.
கொல்லப்பட்ட சீன ஊழியர் காஸ்கோ ஷிப்பிங் லைன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அவரது படுகொலை குறித்து சீனாவில் உள்ள காஸ்கோ ஷிப்பிங் லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவரவில்லை. இது தொடர்பாக கம்பெனி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. வெளிநாட்டில் உள்ள எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்வோம். சம்மந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து, இறுதிச்சடங்குக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அங்கு உள்ளூரில் உள்ள சீன தூதரகம் தேவையான உதவிகளை செய்யும் என குறிப்பிட்டார்.