ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ள நாடுகள்: ரஷியா அதிர்ச்சி தகவல்

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணு சக்தி மையத்தின் முக்கிய உட்கட்டமைப்பு பாதிக்கப்படாதது போன்றே தெரிகிறது என ரஷியா கூறியுள்ளது.
மாஸ்கோ,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரித்து உள்ளார். இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உலக நாடுகள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், பாகிஸ்தான், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டன. இந்த சூழலில், ரஷியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவரான டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்காவின் தாக்குதல் பற்றி மாஸ்கோ நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது,
அமெரிக்க ராணுவ நடவடிக்கை பெரிய அளவில் சாதனை படைக்க தவறி விட்டது என்று கூறியுள்ளார். அமெரிக்க தாக்குதலின் திறன் பற்றி கேள்வி எழுப்பிய அவர், ஈரானின் அணு சக்தி மையத்தின் முக்கிய உட்கட்டமைப்பு பாதிக்கப்படாதது போன்றும், சிறிய அளவிலேயே அது பாதிப்பு அடைந்தது போலவும் தெரிகிறது என்றார்.
அந்நாட்டில் அணு ஆயுதங்களுக்கான செறிவூட்டல் நிகழ்கிறது. வருங்காலத்தில் அணு ஆயுதங்களின் உற்பத்தி ஈரானில் தொடரும் என்றே தற்போது நாம் கூற முடியும் என்றும் மெத்வதேவ் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், எண்ணற்ற நாடுகள் தங்களுடைய அணு ஆயுதங்களை ஈரானுக்கு நேரடியாக வழங்க தயாராக உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவர் குறிப்பிட்ட நாடுகள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.






