ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த 19 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

லைபீரியா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்.டி. டொமினிகா பிராஸ்பெரிட்டி என்ற கச்சா எண்ணெய் கப்பல், கடந்த 11-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகர் கடல் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஏவுகணை போன்ற ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த கப்பலில் 19 இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 மாலுமிகள் இருந்தனர். தாக்குதலை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக கடலோர காவல்படையினர் விரைந்து செயல்பட்டு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்தியர்கள் யாருக்கும் காயம் இல்லை

இதுகுறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் கூறுகையில், கப்பலில் இருந்த 19 இந்தியர்களும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளனர். மீட்கப்பட்ட மாலுமிகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் தேவையான உதவிகளை உறுதி செய்வதற்காக கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்”என்று கூறினார்.

மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல்

இதேபோல், கடந்த 11-ந்தேதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சவுதி அரேபியா நாட்டு கொடியுடன் கூடிய என்.சி.சி. பஜ்ர் என்ற எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த கப்பலில் 3 இந்திய மாலுமிகள் உள்பட பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

X