வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணம்? - தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் தங்கை

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணமடைந்தாரா என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் உலவி வருகின்றன.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணம்? - தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் தங்கை
Published on

பியாங்யாங்,

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்; கிம் உயிரோடு இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன. இந்நிலையில், சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் வடகொரிய தலைவர் கோமாவில் இருக்கிறார் என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். அதேசமயம் வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர். கிம் ஜாங் அன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு முறையாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com