

மாஸ்கோ,
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி விய் ஃபென்ஹி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்து வரும் சூழலில், இந்தியா - சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்த சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே இந்திய நேரப்படி இரவு சுமார் 9.40-மணியளவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் விய் பென்ஹி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இருநாட்டு அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.