

இஸ்லமாபாத்,
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத்தை, விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை பாகிஸ்தானில் நடத்தி ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லீம் லீக் என்ற புதிய கட்சியையும் ஹபீஸ் சயீத் தொடங்கினார். பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஹபீஸ் சயீத், தனது மில்லி முஸ்லிம் லீக் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அனுமதி கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என பாகிஸ்தான் அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஹபீஸ் சயீதின் கட்சிக்கு அங்கீகாரம் அளித்தால் அரசியலில் வன்முறையும், தீவிரவாதமும் தலை தூக்கும் என்பதால் தேர்தல் கமிஷன் அக்கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.