

துபாய்,
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் ஒருவாரத்தை எட்டியுள்ளது. ஈரான் உச்சதலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என்று கூறி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் சகட்டுமேனிக்கு தாக்கி வருகிறது. கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட 7 நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய துபாய் விமான நிலையத்திலும் ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது.
இதனால், விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து அங்கு மீண்டும் பகுதியளவு சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் துபாய் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானத்திற்காக காத்திருந்த பயணிகள், அங்கிருந்த ரயில் சுரங்கத்தை நோக்கி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மீண்டும் விமான சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.