

தாகர்,
ரஷியா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலக உணவு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமையை நம்பியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கோதுமை ஏற்றுமதியில் ரஷியாவும், உக்ரைனும் மிக முக்கியமான நாடுகளாக விளங்குகின்றன. அங்கு தற்போது நிலவி வரும் போர் சூழலானது, சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகலில், 2021 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 60 சதவீத கோதுமை ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய போர் நெருக்கடியால், செனகல் நாட்டிற்கான உணவு ஏற்றுமதி சீர்குலைத்து அங்கு உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
விலைவாசி உயர்வை எதிர்கொள்ள செனகல் அரசு மானியங்களை அதிகரித்து வரிகள் மற்றும் கட்டணங்களை குறைத்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் ஏற்கனவே அங்கு கோதுமை விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது உக்ரைன்-ரஷியா இடையிலான போர் காரணமாக அங்கு மேலும் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.