

கெய்ரோ,
எகிப்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அலெக்ஸாண்ட்ரியா நகரில் அமைந்துள்ள பண்டைய அரச குடியிருப்புப் பகுதியில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் பிரம்மாண்ட சுண்ணாம்புக்கல் அடித்தளங்களைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்லியல் அமைச்சகம் கடந்த 24-ம் தேதி அன்று தங்களின் முக்கியத் தொல்லியல் கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள 'ஷல்லலத் தோட்டம்' பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த பண்டைய அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த 'அலெக்ஸாண்ட்ரிய நாகரிக ஆராய்ச்சி நிறுவனம்' அப்பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாகவே இந்த பண்டைய கட்டுமானம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அகழ்வாராய்ச்சியில் சதுர வடிவிலான பிரம்மாண்ட சுண்ணாம்புக்கல் கட்டிட அடித்தளமும், அதனைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவரும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அந்த கட்டிடத்திற்கு அடியில் 2,200 ஆண்டுகள் பழமையான வடக்கு நோக்கிச் செல்லும் ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.மு. 222 முதல் 205 வரை எகிப்தை ஆட்சி செய்த நான்காம் டோலமி பிலோபேட்டர் மன்னரால் கட்டப்பட்ட அரச கல்லறை வளாகத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ராபோ தனது நூலில் குறிப்பிட்டுள்ள அரச கல்லறைகளுடன் இந்த அமைப்பு ஒத்துப்போனது.
இந்த சுரங்கப்பாதை எங்கு செல்கிறது என்பதையும், இங்கு புதைக்கப்பட்டுள்ள அரச குடும்பத்தினர் குறித்த உறுதியான ஆதாரங்களையும் கண்டறியத் தொல்லியல் துறையினர் அடுத்தகட்ட ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.