அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்

உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் (வயது 78) அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த சூழலில் காசா போர், உக்ரைன் போர் உள்ளிட்டவற்றை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

தற்போது டிரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான தொலைப்பேசி உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் டிரம்ப் பேச வைத்திருக்கிறார். இந்த உரையாடல், எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி, உக்ரைன்-ரஷிய போரின் முடிவு என இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜெலன்ஸ்கியுடன் பேசிய எலான் மஸ்க், உக்ரைனுக்கு தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் டிரோன் கண்கணிப்பு உள்ளிட்ட சாட்டிலைட் தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்தும் என்று உறுதி அளித்துள்ளாராம். இந்த மூன்று பேரின் உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. தான் டிரம்ப் உடன் பேசியதாகவும் அவர் ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தார் என்றும் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி உரையாடலின் போது எலான் மஸ்க்கும் இடம்பெற்றார் என்பதை உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த பேச்சுவார்த்தை உக்ரைன்-ரஷியா போர்க்களத்தை தலைகீழாய் மாற்றுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அடுத்து நடைபெற உள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com