எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நிதியம், உலக வங்கி வலியுறுத்தல்

எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வலியுறுத்தி உள்ளன.
எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நிதியம், உலக வங்கி வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய சவாலாக விளங்குகிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் நேற்று மதிய புள்ளி விவரங்கள்படி இந்த வைரஸ் உலகமெங்கும் 13 கோடியே 47 லட்சத்து 19 ஆயிரத்து 328 பேருக்கு பாதித்துள்ளது. 29 லட்சத்து 15 ஆயிரத்து 972 பேரை பலி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளபோதிலும் தொற்று பரவல் முடிவுக்கு வரவில்லை. பல நாடுகளில் இரண்டாவது அலை தாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டனில் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டம் நடந்துள்ளது. இதையொட்டி வளர்ச்சிக்குழு கூறியுள்ள தகவல்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவது முக்கியமானது.

* புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலையை வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடைவதற்கு ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை இல்லாத வகையில் பொது சுகாதாரம், பொருளாதாரம், சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

* பொருளாதார அதிர்ச்சியால் வறுமை அதிகரிக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. வளர்ச்சி ஆதாயங்களை மாற்றி அமைக்கிறது.

* கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் உலக வங்கி குழுவும், சர்வதேச நிதியமும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

* வளர்ந்து வரும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தித்திறன், மருத்து வினியோகங்களை ஆதரிப்பதற்கான முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com