பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கிய 200 கோடி டாலர் கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு; இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்திப்பிற்கு பின் அமீரகம் அறிவிப்பு

பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கியுள்ள 200 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மந்திரிகள் சந்திப்பிற்கு பின் அமீரகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கிய 200 கோடி டாலர் கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு; இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்திப்பிற்கு பின் அமீரகம் அறிவிப்பு
Published on

பாகிஸ்தான்-அமீரகம் மந்திரிகள் சந்திப்பு

அமீரகம்- பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இந்த நிலையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடந்த 17-ந் தேதி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேசி 2-வது முறையாக அமீரகம் வந்தார். இதில் அவர் நேற்று முன்தினம் அபுதாபியில் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகத்தின் மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். அப்போது அமீரக வெளியுறவு மந்திரி, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பாகிஸ்தான் கலந்து கொள்வது குறித்து மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

அவரிடம் ஷா மஹ்மூத் குரேசி, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பாகிஸ்தானின் வரலாறு மற்றும் புவியியல், கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றின் முக்கியத்துவங்களை விளக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். அதேபோல் அமீரகத்தில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மீது கொரோனா தொற்று பரவல் காலத்தில் அக்கறையுடன் கவனம் செலுத்தியதை நினைவு கூர்ந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் சந்திக்கும் விசா பிரச்சினைகள் குறித்து அமீரக மந்திரியிடம் குரேசி எடுத்துக் கூறினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று அமீரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கியுள்ள 200 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. இதில் உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் அமீரகம் 200 கோடி அமெரிக்க டாலரை கடனாக வழங்கியது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த நேற்று முன்தினம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இருதரப்பு வெளியுறவு மந்திரிகள் சந்திப்பிற்கு பிறகு இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமீரக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேசி நேற்று ஈரான் நாட்டிற்கு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com