நாடாளுமன்ற தேர்தல்: பாகிஸ்தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். #PakistanElections2018
நாடாளுமன்ற தேர்தல்: பாகிஸ்தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து 272 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதேபோல் அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துங்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

230 தொகுதிகளுக்கான ஓட்டுகளை எண்ணியபோது இம்ரான் கானின் தெஹ்ரீக்இஇன்சாப் கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 63 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 38 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

இதர கட்சி வேட்பாளர்கள் 50 இடங்களில் கூடுதல் ஓட்டு வாங்கி முன்னிலையில் உள்ளனர். இதே நிலைமை நீடித்தால், இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை என்பதால், தொங்கு பாராளுமன்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இம்ரான்கானுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது. தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனவும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

நிராகரிக்கப்பட்ட இயக்கங்கள்

இதற்கிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஆதரவு கட்சியான அல்லா ஒ அக்பர் தெஹ்ரீக் கட்சியும் போட்டியிட்டது. அதேபோல், சில தீவிர இயக்கங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ள பலர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

ஆனால், தற்போது வரை தேசிய அளவிலும் சரி மாகாண அளவிலும் சரி, இந்த இயக்கங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் வாக்காளர்கள் இந்த இயக்கங்களை முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்பது தற்போது வரை வெளிவந்த தேர்தல் முடிவுகளின் படி தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு, தீவிரபோக்குடன் செயல்படும் சில இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வென்று பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை எட்டிவிடுமோ? என உலக நாடுகள் மத்தியில் எழுந்த கவலைகளுக்கு பாகிஸ்தான் மக்களின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. ஹபீஸ் சயீத் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த வேட்பாளர்கள் பலர் குறிப்பிடும் படியான வாக்குகளை கூட பெறாமல் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com