

டோக்கியோ,
ஜப்பானின் புகழ்பெற்ற 'மவுண்ட் புஜி' மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையேற்றத்திற்குப் பிரபலமான பூஜி மலை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகவும் இருந்து வருகிறது. நகாயா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது இரு மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் மவுண்ட் புஜி மலையில் ஏறியுள்ளார். அவர்கள் 'புஜினோமியா' மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, அவரது 7 வயது இளைய மகன் மலையின் 6-வது முகாம் பகுதியில், சுமார் 2,490 மீட்டர் (8,169 அடி) உயரத்தில் காலை 7:30 மணியளவில் தனக்குக் களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ளான்.
இதைக் கேட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்த விரும்பாத தந்தை, "நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு" என்று கூறிவிட்டு, தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.
அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பலத்த மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவியுள்ளது. காலை 7:40 மணியளவில், அங்குள்ள ஒரு மலைக்குடிலின் ஊழியர், பனிப்பொழிவிலும் மழையிலும் அந்த சிறுவன் தனியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாகச் சிறுவனை மீட்டு, குடிலுக்குள் அழைத்துச் சென்று தங்குமிடம் கொடுத்த அவர், உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், மலையேற்றத்தில் இருந்த தந்தையைத் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர். பனிமலையில் குழந்தைகளைத் தனியாக விடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை எடுத்துரைத்து, அவரைத் திரும்ப வரவழைத்துக் சிறுவனிடம் அவரிடம் ஒப்படைத்தனர்.
தவறான முடிவை எடுத்ததை ஒப்புக்கொண்ட தந்தை, "நான் மிகவும் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்துவிட்டேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜப்பானியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், "மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது குழுவில் இருக்கும் நபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பயணிக்க வேண்டும். ஒருவருக்குச் சோர்வு ஏற்பட்டால் ஒட்டுமொத்த குழுவும் பயண வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பயணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள பூஜி மலைக்கு 2013-இல் உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.டேட் மலை மற்றும் ஹாகு மலையுடன் இந்த மலையும் "புனித மலைகள்" என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் மலையேறுகிறார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்க சில வழித்தடங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.