

வாஷிங்டன்,
இந்தப் புதிய வசதியின் மூலம், வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும். இதில், தற்போது ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளி காட்டப்படும். இதன் மூலம் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறியலாம்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் குரல்/வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக இந்த தளம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக உள்ள வாட்ஸ் அப், பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதிகளில் ஒன்றை வாட்ஸ் அப் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகத் தனியாக காண்டக்ட்ஸ் டேப் வசதியை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது.
இந்தப் புதிய வசதியின் மூலம், வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும். இதில், தற்போது ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளி காட்டப்படும். இதன் மூலம் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறியலாம்.மேலும், தொடர்புகளைப் பெயர், தொலைபேசி எண் அல்லது பயனர்பெயர் மூலம் தேடும் வசதியும் இடம்பெற உள்ளது. ஆன்லைனில் இருப்பவர்களை முதலில் பார்க்கும் வகையிலும், பெயர் வரிசைப்படியும் தொடர்புகளை ஒழுங்குபடுத்த முடியும்.இந்தப் புதிய அப்டேட்டில் பிறந்தநாளை அறிந்து கொள்ளும் வசதியும் இடம்பெற உள்ளது. மொபைலில் சேமித்து வைத்துள்ள தொடர்புகளின் பிறந்தநாள் விவரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட நபருக்குப் பிறந்தநாள் என்றால் கேக் எமோஜியுடன் ‘ இன்று பிறந்த்ந நாள்’ என்ற அறிவிப்பு காட்டப்படும்.
இதன் மூலம், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை எளிதில் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்துகளைப் பகிர முடியும். இந்த வசதி தற்போது உருவாக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.