

காத்மாண்டு,
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 95 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளத்தில் இருந்து தப்பியவர்கள் நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வெள்ளத்தில், சுமார் 19 பாலங்கள், 40 கிலோ மீட்டர் சாலைகள், 200 வாகனங்கள் நீரில் அடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேபாளம் வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1800 309 3793 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தொடர்புக்கு 80690 09901 மற்றும் மிஸ்டு கால் தர 080690 09900 ஆகிய உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக 'இந்தியா இன் நேபாளம்' அமைப்பு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "இன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, பின்வரும் அவசர எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: +977 985 131 6807 +977 970 910 7500" என்று கூறியுள்ளது.
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், “சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 291 வெளிநாட்டினரும், 93 நேபாள நாட்டினரும் அடங்குவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களையும் நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ளது.
அவசர உதவி எண்: 1234
அவசரத் தொடர்பு எண் (Hotline): 1144
சுற்றுலாப் பயணிகள் காவல் பிரிவு: 9851289445