பிரான்ஸ் கலவரம்: ஒரே மாதத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கலவரம் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் கலவரம்: ஒரே மாதத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிப்பு
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் காவல்துறையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறி வன்முறை வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் சுமார் 45,000 பாதுகாப்புப் படைகளைக் கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்குகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே 600 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 700-க்கும் அதிகமானோருக்குக் கடந்த ஒரு மாதத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் 95 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது, காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்தின்போது 400 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை அப்போதைய எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com