

லண்டன்,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அவர் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் உலகளாவிய ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்ட மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
அந்த வகையில் லண்டனில் உள்ள பிர்க்பெர்க் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்று உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர், நீதிபதி சூர்யகாந்திடம் இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் நிலை குறித்து எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது.
அந்த பெண் நீதிபதி சூர்யகாந்திடம், “இந்தியாவில் மாற்றுக்கருத்துகளுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருவதாக நாம் கேள்விப்படுகிறோம். மேலும், இந்த விரோதப் போக்கு உங்கள் உரையில் பிரதிபலிப்பதாகவும், பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.
அவர் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறுக்கிட்டு, ‘இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிகழ்ச்சி. பிற கேள்விகளை அனுமதிக்க முடியாது’ என்று கூறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில், மாணவர்கள் சிலர், ‘எங்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் சிலர் அந்த அரங்கில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் குறித்து கரப்பான்பூச்சிகள் என்று குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டு, அதில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.