ஒரு லிட்டர் டீசல் ரூ.520.35... பெட்ரோல் ரூ.458.40... பாகிஸ்தானில் உச்சம் தொட்ட விலை - மானியம் தரும் அரசு?

பாகிஸ்தானில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. ஈரானும், மத்திய கிழக்கில் உள்ள அந்நாடுகளுக்கு எதிரான ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால், சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதில் எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணையை முற்றிலும் திறந்துவிட்டால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும், இல்லையெனில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் எதிரொலித்திருக்கும் நிலையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்கு, இரண்டு, மூன்று மடங்கு அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, மேலும் சில நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருப்பதுடன், சில விதிமுறைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் பாகிஸ்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்த்தியிருந்தது. இது, ஒரு மாதத்திற்குள் செய்யப்படும் இரண்டாவது விலை உயர்வாகும். டீசல் விலை 54.9 சதவீதம் அதிகரித்து ஒரு லிட்டருக்கு 520.35 பாகிஸ்தானி ரூபாயாகவும், பெட்ரோல் விலை 42.7 சதவீதம் உயர்ந்து ஒரு லிட்டருக்கு 458.40 ரூபாயாகவும் உள்ளது. இந்த புதிய விலை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தப் புதிய விலை உயர்வானது, பணவீக்கத்தை மேலும் தூண்டி, ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் நாட்டின் மக்கள் மீதான நிதிச் சுமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் உயர்வை காரணம் காட்டி, இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்தப் பாதிப்பைக் குறைக்க இருசக்கர வாகனங்களுக்கு மாதம் 20 லிட்டர் வரை லிட்டருக்கு 100 ரூபாய் மானியமும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,500 ரூபாய் மானியமும் வழங்கப்படும் என நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, "அரசாங்கத்தை ஆதரிப்பதும் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதும் மிக முக்கியமான விஷயமாகும். பாகிஸ்தானியர்களாகிய நாம், நாட்டின் முன்னேற்றத்தில் எந்த தடையும் ஏற்படாத வகையில், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2026 தொடரானது எண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அத்தொடரில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் முல்தான், பெஷாவர், பைசலாபாத், கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய ஆறு நகரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இத்தொடர், தற்போது கராச்சி மற்றும் லாகூர் ஆகிய நகரங்களுக்கு மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது, செலவைக் குறைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com