காசா: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலி

பாலஸ்தீன பகுதியை விட்டு செல்ல முடியாமல், முகாம்களிலும், ஐ.நா. நடத்த கூடிய காப்பகங்களிலும் அவர்கள் தங்கி உள்ளனர்.
காசா: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலி
Published on

காசா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசும் அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில், ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில், 3-ல் ஒரு பங்கு மக்கள் குழந்தைகள் ஆவர். பாலஸ்தீன பகுதியை விட்டு செல்ல முடியாமல், முகாம்களிலும், ஐ.நா. நடத்த கூடிய காப்பகங்களிலும் அவர்கள் தங்கி உள்ளனர்.

இதனால், அவை நிரம்பி வழிகின்றன.  போரால் பாலஸ்தீனர்கள் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனை காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com