

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்துள்ள காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பு, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிட வேண்டும் என்று நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
15 அம்சங்களைக் கொண்ட டிரம்ப்பின் திட்டத்தில் காசாவில் அமைதி ஏற்படுத்துதல், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களை நிராயுத பாணியாக்குதல், இஸ்ரேல் ராணுவத்தை படிப்படியாக வெளியேற்றுதல் மற்றும் காசா மறுகட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் டிரம்ப் வெளியிட்ட இந்தத் திட்டம் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஹமாஸ் தரப்பும் ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான திட்டத்துக்கு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருந்தது.
ஆனால், இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ஹமாஸ் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். “ஹமாஸ் உண்மையாகவே நிராயுதபாணியாக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் எந்தப் பகுதியிலிருந்தும் வெளியேறாது” என்று அவர் கூறியுள்ளார்.மேலும், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது மட்டும் போதாது என்றும், அது முழுமையான நிராயுதபாணியாக்கமாக இருக்க வேண்டும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பு தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது, இஸ்ரேல் அனைத்து வகையான தாக்குதல்களையும் நிறுத்தி காசாவில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளது.டிரம்பின் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சில யோசனைகள் தங்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும், சிலவற்றை ஏற்க முடியாது என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா அமைதித் திட்டம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது, அங்கு நீடித்த அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.