

ஒட்டாவா,
கனடாவின் அதிகம் தேடப்படும் 25 பேர் கொண்ட பட்டியலில் கோல்டி பிரார் முதலிடத்தில் உள்ளார். அவரை குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.1.63 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிராரை இரு நாட்டு போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவரை இந்தியாவும் தேடி வருகிறது. ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய கோல்டி பிராரை கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் எப்.பி.ஐ தனது மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. மேலும் அவரை குறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8.9 கோடி) வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கோல்டி பிராரை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 2.50 லட்சம் கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.63 கோடி) பரிசு வழங்கப்படும் என்று கனடா போலீஸ் அறிவித்து உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவின் வின்னிபெக் நகரில் சுக்தால் சிங் கில் என்பவர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கோல்டி பிராரை போலீசார் தேடி வருகிறார்கள். இக்கொலை மற்றும் கொலைச்சதி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் கோல்டி பிரார் மற்றும் கரண்பீர் சிங் ஆகியோருக்கு எதிராகப் வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் கோல்டி பிராரை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டறிய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போலோ திட்டத்தின் கீழ் இந்த வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.