காசாவில் சிறைபிடிக்கப்பட்ட கிரெட்டா தன்பெர்க் விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பி வைப்பு

காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-காசா இடையே நடைபெறும் போரில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிர்க்கதியாக தவிக்கும் சூழல் உள்ளது. எனவே ஆதரவற்று தவிக்கும் காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில் சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கும் காசாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தார். இதற்காக இத்தாலியின் சிசிலி தீவில் இருந்து ஒரு சரக்கு கப்பல் புறப்பட்டது. இஸ்ரேல் கடற்பகுதிக்குள் நுழைந்தபோது அந்த கப்பலை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். பின்னர் கிரெட்டா தன்பெர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேரை சிறைபிடித்தனர்.
இதனையடுத்து கிரெட்டா தன்பெர்க் உள்பட 4 பேரை இஸ்ரேல் அரசாங்கம் விமானம் மூலம் அவர்களது தாயகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது. அதேசமயம் மற்ற 8 பேரும் அஷ்டோட் நகரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.






