நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்

மாணவர்களை, பள்ளிக்கு அருகே உள்ள உயரமான பகுதிக்கு ஆசிரியர் தவாடி அழைத்து சென்றார்.
நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்
Published on

காத்மாண்டு,

திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்பதால் அங்கு சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேபாள வெள்ளத்தின்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் 1,643 மாணவர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் அதிகம் நேபாளத்தில் பாதிக்கப்பட்ட நுவாகோட் பகுதியில், மூன்று மாடிகளுடன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் முதல்வராக உள்ள, 47 வயதான ராஜேந்திர தவாடிக்கு, தன் நண்பர் மூலம் பனிப்பாறை உடைப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது குறித்த எச்சரிக்கை தகவல் கடந்த, 26-ந்தேதி காலை 9:20 மணிக்கு கிடைத்தது.

எனினும், பள்ளி சுற்றுச்சுவர் பாதுகாப்பாக உள்ளதாக தவாடி எண்ணினார். ஆனால், வெள்ள நீரின் வேகம் அதிகரித்ததை உணர்ந்த அவர், உடனே பள்ளி மணியை ஒலிக்க செய்து, வகுப்பறையில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதற்குள் தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த மாணவர்களை, பள்ளிக்கு அருகே உள்ள உயரமான பகுதிக்கு தவாடி அழைத்து சென்றார். இதற்கிடையே, வெள்ள நீர், பள்ளி கட்டடத்தை அடித்து சென்றது. உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 1,643 பள்ளி மாணவர்களை பத்திரமாக காப்பாற்றிய ஆசிரியர் தவாடியை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com