

காத்மாண்டு,
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி ஆற்றுப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.கனமழையால் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆபத்தை தவிர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது.போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்ச ரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது.சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என அனைத்தையும் வாரிச்சுருட்டி சென்றது. தற்போதைய நிலவரப்படி வெள்ள பாதிப்பு காரணமாக 626 பேர் உயிரிழந்துள்ளனர். 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.