'காசாவில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
'காசாவில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். 400 பேர் சிகிச்சை பெறும் நிலையில், புலம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவுக்கான ஆக்சிஜன் உபகரணங்களின் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், 7 குழந்தைகள் மற்றும் 27 நோயாளிகள் வரை உயிரிழந்து விட்டனர் என ஹமாஸ் அமைப்புக்கான துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் கூறியுள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சர்வதேச விதிகளின்படி மருத்துவமனைகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினால், மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் குறையும் என்று நான் நம்புகிறேன். இஸ்ரேல் அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அதே சமயம் மருத்துவமனைகள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com