

புதுடெல்லி
மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் கடல்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஈரானை ஒட்டியுள்ள பெர்சியன் வளைகுடா பகுதியில், நிறுத்தப்பட்டு உள்ள கப்பல்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. நேற்று இந்திய கொடியுடன் கூடிய 28 கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இன்றும் அதே எண்ணிக்கையிலான கப்பல்கள் உள்ளன.
அவற்றில் 24 கப்பல்கள் ஈரானின், ஹார்மூஸ் ஜலசந்திக்கு மேற்கே உள்ளன. அதில், 677 இந்திய பணியாளர்கள் உள்ளனர். இதேபோன்று 4 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்திக்கு கிழக்கே நிறுத்தப்பட்டு உள்ளன. அதில், 101 இந்திய பணியாளர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
அனைத்து இந்திய கப்பல்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு பற்றிய விவரங்களை கவனித்து வருகிறோம் என கூறியுள்ளார். இதேபோன்று, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளிவிவகார மந்திரி அப்பாஸ் அராக்சியை கடந்த சில நாட்களில் 3 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் கடைசியாக பேசும்போது, கப்பல் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு பற்றிய விசயங்கள் பேசப்பட்டு உள்ளன. இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று உறுதிப்படுத்தினார்.