கடைசி நேரத்தில் மனைவியின் விஷ விருந்தில் இருந்து உயிர் தப்பிய கணவர்; பெற்றோர் பலி

உள்படம்: வில்கின்சன் தம்பதி
எரீன் சமைத்த உணவில் அதிக விஷத்தன்மை நிறைந்த காட்டு காளான்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் லியான்கதா பகுதியை சேர்ந்தவர் சைமன் பேட்டர்சன். இவருடைய மனைவி எரீன் பேட்டர்சன் (வயது 50). சைமனின் பெற்றோர் டான் மற்றும் கெயில் பேட்டர்சன் ஆவர். 70 வயது நிறைந்தவர்கள்.
சைமனின் அத்தை ஹீத்தர் வில்கின்சன் (வயது 66). ஹீத்தரின் கணவர் இயான் வில்கின்சன் (வயது 68). இயான் கொரும்புர்ரா பகுதியில் பாதிரியாராக இருக்கிறார். இந்நிலையில், குழந்தை வளர்ப்பதில் சைமனுக்கும், எரீனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பதிலும் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் இருந்தன.
இந்த சூழலில், கடந்த 2023-ம் ஆண்டு கணவர் சைமனுக்கு சிறப்பான மதிய விருந்து ஒன்றை எரீன் தயாரித்து, அவரை சாப்பிட வரும்படி கூறியுள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் சைமன் அதனை தவிர்த்து விட்டார். ஆனால் எரீனின் வலையில், சைமனின் பெற்றோர் மற்றும் வில்கின்சன் தம்பதி சிக்கி கொண்டனர். விருந்தில் அசைவ உணவுடன் விஷ காளான் சேர்த்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
எரீன் சமைத்த உணவில் காட்டு காளான்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவை அதிக விஷம் கொண்டவை. அவற்றை பயன்படுத்தி விருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. அது தெரியாமல் விருந்து சாப்பிட்ட 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இயான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இயானை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டும் எரீனுக்கு எதிராக பதிவாகி உள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கிறிஸ்டோபர் பீலே முன் விசாரணைக்கு வந்தது. எரீனுக்கு பரோலில் வெளியே வர முடியாத வகையில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், எரீன் அவருடைய 83-வது வயதிலேயே விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியும். விசாரணையின்போது, எந்தவித இரக்கமும் காட்டாமல் மாமனார், மாமியார் மற்றும் உறவினரை படுகொலை செய்ததற்காக பீலே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில், உடல்நிலை சரியில்லை என எரீனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி விட்டு கடைசி நேரத்தில் விருந்துக்கு செல்லாமல் சைமன் இருந்து விட்டார். இதனால், அவர் உயிர் தப்பினார்.
ஆனால், எரீன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கெயில் என்னுடைய தாய் போன்றவர். நல்ல முறையில் என்னை கவனித்து கொண்டவர். இயானும், ஹீத்தரும் நான் சந்தித்தவர்களில் மிக சிறந்தவர்கள். அவர்கள் எனக்கு எந்த தீங்கும் செய்ததில்லை. அவர்களின் இழப்பால், நான் உடைந்து போயிருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் தாத்தா-பாட்டியை இழந்து விட்டனர் என கூறியுள்ளார்.






